Monday, December 31, 2012

முகநூல்

அண்ணலும் நோக்கினால்,அவளும் நோக்கினால்,
ஆனால் இருவரும் நோக்கியது,
எவளையோ,எவனையோ.

அடி,உதை வாங்கிய பின்,
ஆதரிக்கவும்,எதிர்க்கவும்,
ஆயிரமாயிரம் நபர்கள்.

எந்த பால் வகை என தெரியாமல்,
அதன் சுவை மட்டும் ,
ஊட்டத் துடிக்கிறது.

அண்ணா,தம்பி,அக்கா,தங்கை,
உறவுகள் தெரியாமல்,அனைவரையும்
நண்பர்கள் என காட்டும் முட்டாள்,

முகநூல்.....!!!!!!.

 கருத்து :சதீஷ்
வரிகள் : விக்னேஷ் 
  

Tuesday, August 14, 2012

மூங்கில்கள்

அது ஓர் அடர்ந்த முங்கில் காடு,ஆற்றுப்படுகையிலிருந்து சற்று விலகி,
சாக்கடையும் ,சகதியும் கலந்திருந்த இடத்தில்,மிக நெருக்கமாக,
ஆண்,பெண்,சாதி,மதம் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் இன்றி வெவ்வேறு,வயதுகளில் வளர்ந்திருந்தது அந்த முங்கில் சமூகம்.

ஒரு சிறுவன்,அவ்வழியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்,அவன் கையில்
கதிர் அருவாள் வைத்திருந்தான்.
திடிரென,சிறிதாய் வளர்ந்திருந்த முங்கிலை வெட்டி தன் கையில்
வைத்துக்கொண்டான்,
மனிதர்களை போல்,வெட்டப்பட்டதும்,மூங்கில்கள் இறந்து விடுவதில்லை,
சிறுவனின் கையில் இருக்கும் அந்த முங்கிலும் உயிரோடுதான்,
இருக்கிறது,ஆனால் தான் என்னவாக போகிறோமோ,தன்னை வெறுமென,
எரிந்து விட்டு போவானோ என பதற்றம் கொண்டிருந்தது அந்த மூங்கில்.


இதே காரணத்தை எண்ணியும்,பிரிவை தாங்காமலும்,வெட்டப்பட்ட மூங்கிலின் அருகிலிருந்த மற்றுமொரு மூங்கில் அழுது கொண்டிருந்தது,
அதன் மேற்ப்பரப்பில் மெல்லிய வெடிப்பு ஏற்ப்பட்டு,அதன் வழியே,
விசும்பல்களுடன் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது,
மற்ற மூங்கில்கள் மொத்தமும்,கூட்டமாக அழுகைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது .


மூங்கிலின் அழுகையையோ,விசும்பலையோ,ஆறுதல்
வார்த்தைகளையோ,அச்சிறுவனக்கு கேட்கும் வாய்ப்பு இல்லை.
ஏனெனில்,மனிதர்களுக்கும் ,தாவரங்களுக்கும் இடையான பரிணாம வளர்ச்சியில் நெடுந்தூர வித்யாசம் உண்டல்லவா !


அந்த மூங்கில் கூட்டத்தினுள்,ஓர் வயது முதிர்ந்த மூங்கில் மட்டும்,
வெட்டப்பட்ட முங்கிலையே தொடர்ந்து ஏறிட்டுக்கொண்டிருந்தது.

சிறுவனின் சிறிது நேர நடவடிக்கையிலே,அதன் முகத்தில் மகிழ்ச்சி
ஏற்படத்தொடங்கியது,
அச்சிறுவன்,வெட்டிய மூங்கிலின் மேற்ப்பரப்பை நன்கு சீவி,அதில் துளையிட்டு புல்லாங்குழல் செய்து,மென்மையாக இசைக்கத் தொடங்கினான்.


இதை பார்த்துக் கொண்டிருந்த,வயதான மூங்கில்,மற்றவைகளிடமும் காட்டியது,தங்கள் கூட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டாலும்,இனிமையான இசை உருவாக்கும் கருவியானதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தது ,ஆறுதல் அடைந்தது,முங்கில்களும் இசையை உணருமா எனக்கேட்டால்,ஆம் நிச்சயமாக இசை என்பது இனம்,மதம்,மொழிகளை கடந்து உயிரின பாகுபாடும் பார்ப்பதில்லை,அனைத்திடமும் கலந்திருக்கிறது .

 இந்நிகழ்வை தொடர்ந்து,நாம் அணைவருமே புல்லாங்குழல்கள் ஆக முடியாதது ஏன்?என விவாதிக்க தொடங்கியது,
தங்களை சுற்றிலும் சாக்கடை நிரம்பி இருப்பதையும்,முள் செடிகளால் சூழப்பட்டு பிறர் பார்வையில் படாமல்,மேற்பரப்பில் வெடிப்பு கண்டு,சரிவர வளர்ச்சி இல்லாமல் இருப்பதையும் விவரித்து கொண்டிருந்தது,அந்த வயதான முங்கில்.
இதனால் மனமுடைந்த மூங்கில்கள்,இனியாவது தங்களிடமிருந்து பிறக்கும் மூங்கில்கள் நல்ல முங்கில்களாக வளர வேண்டுமென விரும்பியது,

அதனுடைய கொண்டாட்ட காலங்களான,ஓர் காற்றடிக்கும் நேரத்தில்,
மூங்கில் கூட்டம் மொத்தமும் ஒருமித்த வேகத்தில்,
தங்கள் விதைகளை,நீரோட்டமிக்க,சூரிய ஒளி கிடைக்கும்,பிறர் கண்களில் படும்படியான இடத்தில் தூவின.

அவைகளின் ஆசைப்படியே,புதிதாக ஓர் முங்கில் கூட்டம் வளரத்தொடங்கியது,விளையும் பொழுதிலே அவைகள் நல்ல வளர்ச்சி அடைவதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டது அப்பழைய மூங்கில்கள்.

புதிய முங்கில்களிடம் அதன் வளர்ச்சியை சுட்டிக்காட்டி,நீங்கள் எல்லாம் எங்களை போல் அல்ல,இந்த ஆற்றுப்படுகை உங்கள் உலகம் அல்ல,நீங்கள் எல்லாம் புல்லாங்குழல் ஆகும் வாய்ப்பு கொண்டவர்கள்,அதுவே உங்கள் லட்சியம் என திருத்தமாக அறிவுரித்தியது.

எல்லா உயிர்களுக்கும் பொதுவான நீதியாம்,வயது முதிர்ச்சி காரணமாக அப்பழைய மூங்கில்கள் ஒவ்வொன்றாய், சேதமடைந்து விழத்தொடங்கின,
ஒவ்வொரு முங்கிலும் தான் இறக்கும் தருவாயில்,வலிகள் நிறைந்த குரலுடன்,புதிய முங்கில்களை நோக்கி,
நீங்கள் எல்லாம் புல்லாங்குழலாவீ ர்கள்,உங்களிடமிருந்து இசைக்கப்படும் மெல்லிய இசை எங்கள் ஆன்மாவை வந்து சேரும் ஆகையாலே வருந்தாதிர்கள் என சொல்லி விட்டு இறந்து போயின.


புதிய மூங்கில்கள் நன்கு வளர்ச்சி கண்டதும்,தங்கள் மூதாதையரின் ஆசையை  நிறைவேற்ற ஏங்கித்  தவித்தது,தங்களை கடந்து செல்லும் மனிதர்களை பரிதாபம் கலந்து பார்த்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் அரசு அறிவிப்பின் படி,ஆற்றினை சுத்தம் செய்வதாக சொல்லி,பெரிய இயந்திரங்களை கொண்டு,மொத்தமாக எல்லா முங்கில்களையும் வெட்டி எடுத்தார்கள்,

தாங்கள் வெட்டப்பட்டதும்,அதனிடையில் கூச்சலும்,கலகலப்பும் தாங்க முடியவில்லை ,இனி தாங்கள் புல்லாங்குழல் ஆகும் நாள் நெருங்கிவிட்டதாக மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது,

ஆனாலும் அவைகள்,பாடை கட்டவும் ,மண்டபம் அமைக்கவும்,பிறரை அடிக்கவுமே பயன்படுத்தப்பட்டன.

ஆரம்பத்தில் மிகுந்த குழப்பம் அடைந்திருந்தது அவைகள்,விதி என்னும் சொல்லை அறியாத அவைகளால் வாழ்க்கையின் இயல்பை புரிந்து கொள்ள முடியவில்லை.

மிகுந்த பயன்பாட்டுக்குப் பின் பாதிக்கு பாதி சிதிலமடைந்த பிறகு,நல்ல முங்கில்களாக வளர்ந்த அவைகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால்,இனி தான் புல்லாங்குழலாக முடியாதென புரிந்து கொண்டது.

இறந்து போன மூங்கில் மூதாதையர்கள்,இன்னுமும் கூட இனிமையான இசையை எதிர்நோக்கி,காத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

                                                                                                                  - மீனாவிக்னேஷ் 

Tuesday, June 26, 2012

மாநகரம்

வெறிச்சோடிய தெருக்களில்,
குறுக்கும் நெருக்குமாக,
வாகனம் ஓட்டி பழகியவன் நான்,
மாநகரின் பரபரப்பான சாலைகளில்,
போக்குவரத்து சமிக்ஞை பொறுமை கற்று தருகிறது.

கையில் இருந்த பணமெல்லாம்,
காலியாகிவிட்டால்,
தேதி பார்காமலே சொல்லிவிடலாம்,
மாதக்கடைசியென்று.

என் வயதிற்கு இணையானவர்களே
படித்துக்கொண்டிருக்கையில்,
என்னை விட சிறியவர்கள்,
இங்கே உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்,

தினம் தினம் எடுக்கும் கணக்கெடுப்பில்,
இளைஞர்கள் அதிகம் என காட்டினாலும்,
முகத்தின் சோர்வு,
அவர்களை முதியவர்களாக காட்டுகிறது.

மேல் உள்ளவை ஒன்றோடொன்று
சம்மந்தமில்லை,என கருதினால்,
மாநகரம் அப்படிப்பட்டதே,
ஒன்றோடொன்று சம்மந்தப்படுவதில்லை

-மீனா விக்னேஷ் 

ஓர் கசப்பான உண்மை

நீண்ட தெரு வழியாக
                 அவள் நடந்து செல்கிறாள்,
                                                அதன் குறுக்கான தெருக்களில்
                 என் மிதிவண்டியை செலுத்தி,
                                                மிண்டும் மிண்டும் அவளின்
                   எதிர் படுமாறு சென்றதுண்டு,

அவள் எதிர் படும் போதெல்லாம்,
                  அனிச்சையாய் என் தலை மயிரை,
                                                    கோதி விடுவதுண்டு,

அவளுக்காக அரைமணி நேரம்
                        காத்திரிப்போம் என்று அனுமானித்து,
                                                    அதில் தோற்று,
                         பலமணி நேரங்களாய் நீடித்து,
                                                   அதிலும் தோற்றதுண்டு,

ஆளில்லாத அவள் வீட்டு மொட்டை,
                           மாடியை பார்த்தவாறு,
                                                பல ஜாலங்கள் செய்யும் மேகங்களை,
                           காணாமல் தவறவிட்டதுண்டு,

அவள் உலக அழகி என கனவில் கண்டு,
                            அவள் கையொப்பம் வாங்கிட,
                                               காகிதம் இல்லாததால்,
                            ஆயிரம்ருபாய் நோட்டு நீட்டியதுண்டு,

அவளின் பொய்யான வருகையை சுட்டிக்காட்டி,
                              பலர் என்னை கேலி  செய்ததுண்டு,
                                              ஏமாந்த பொழுதும்,
                              அதில் வெக்கி நகைத்ததுண்டு,

பல வருடங்கள் கடந்து விட்ட இன்று,
                               இவையணைத்தும் காதலே இல்லை,
                                                    என சொல்கிறது ஓர் கசப்பான உண்மை.

                                                                                                 -  மீனா விக்னேஷ்

Friday, June 22, 2012

கண்டிப்புகளும் சில காரணங்களும்

1.
நளினி, ஓர் சாதாரண நகரத்து பெண், கொஞ்சம் குட்டையாக,மாநிறமாக பார்பதற்கு அவ்வளவாய் ஒன்றும் அழகில்லைஎன்றாலும்,
தன் பார்வையாலும்,சிரிப்பாலும் ,பேச்சாலும் வசிகரிப்பவள்,

நளினி, தன் தெரு வழியாக வண்டியில் சென்று கொண்டிருந்தாள்,
இரண்டும் கெட்ட வயதுக்காரர்கள் சிலர் அவளை பின்தொடர்ந்தவாறு விசில் அடித்து கேலி செய்து கொண்டிருந்தார்கள்,
அவர்களும் அதே தெருவை சேர்ந்தவர்கள் என்பது அவளுக்கு தெரியும்,
லேசாக தன் தலை திருப்பி ஓரக்கண்ணால் கொஞ்சமாக சிரித்து காட்டினால்,


இது போதுமே,பேய் பிடித்தது போல் தினம் தினம் அவளின் பின்னால் விரட்ட தொடங்கினார்கள்,
அந்த இரண்டும் கெட்ட வயதுக்காரர்கள்,

ஒரு எல்லைக்கு மேல் அவர்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடியவில்லை,
கொஞ்சம் கொஞ்சமாக,பேசத்தொடங்கினாள்,பழகத்தொடங்கினாள்,

மேலும் அவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாகவும் மாறிப்போனார்கள்,
அதிலும் குறிப்பாக,எதிர் வீட்டு மகேஷ்,
அவளின் தொலைபேசியில் குறுந்தகவல் நிரம்புவது மகேஷ்-ன் பெயராலே தான்,

நண்பர்கள் குழுவாக இருக்கிறார்கள் என்றால்,அதில் நளினி இல்லாமல் பார்க்க முடியாது, அதே போல தான் மகேஷ்-ம்,

நளினி ஓர் பேச்சு பிரியை,அதிகமாக பேசுவாள்,
அவளின் பேச்சு உணர்வுப்பூர்வமாய் அர்த்தமுள்ளதாய் இறுக்கும்,
யார் தன்னை கவனிக்கிறார்களோ இல்லையா,
அவளின் பேச்சு மட்டும் தொடர்ந்து கொண்டே தான் இறுக்கும்,

யார் அவளை கவனிக்கிறார்களோ இல்லையா,
மகேஷ் மட்டும் கவனித்துக்கொண்டு தான் இருப்பான்,
அவளின் பேச்சு ,சிரிப்பு ,பார்வையில்மயங்கிப்போயிருந்தான்,மகேஷ்
ஒருதலைக்காதல் பூத்திருக்கவும் வாய்ப்புண்டு,

2.
நிறைய நண்பர்கள்,ஆண்கள்,பெண்கள் என தன நட்பு வட்டம் பெருகியிருந்தாலும்,
தன் அத்தை மகன்,நவீன் மீது ஓர் இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது,
சிறு வயதிலிருந்தே,முறைப்பெண்,முறைப்பையன் என  உறவுக்காரர்களால் கூறப்படுவதனால் இவ்வுணர்வு ஏற்ப்பட்டிருக்கலாம்,

காதல் ஏற்படுவதற்கு மிகச்சாதாரண காரணமென்றாலும்,
அதனை உண்மையானதாகவும்,ஆழமானதாகவும்  உணர்ந்தாள் நளினி,
சொந்தம், என்பதால் அடிக்கடி அவனை சந்திக்க முடியும்,
அவர்கள் இருவரும் தனியே இருப்பதையும்,
அவன் தன்னை நெருங்கி வருவதையும்,
அவன் விரல்களால் தன் தலை மயிரை கோதி விடுவதையும்,
அவன் மார்போடு சேர்த்து அணைத்து கொள்வதையும்,
தன்  கழுத்தில் முத்தமிடுவதையும்,
காதலாக   உணர்ந்தாள் நளினி,
கடைசி வரை இப்படியே இருந்து விடுவதென எத்தனித்தால்,

ஆனால் இவையெல்லாம் தொடர்ந்தது
அவர்களின் விடலை பருவம் முடியும் வரை தான்,
பிறகு படிப்பு,வேலை என அவன் வட்டாரம் முழுக்க மாறத்தொடங்கியது,
தொலைபெசித்தொடர்புகள் ,நிறைய தோழிகள் என அவன் காதலை,குறைக்கும் காரணிகள் அதிகம் இருந்தது,
அதிகம் சந்திப்பதில்லை,பேசுவதில்லை,
அப்படியே பேசினாலும் அவன் தோழிகளை பற்றியே அதிகம் பேசுகிறான்,
இப்படியான ஒரு நாளில்,
"நவீன் இப்பல்லாம் நி எங்கிட்ட  ஒழுங்காவே பேசுறதில்லையே ஏன்டா?"
என கேட்டால் நளினி,
"அதெல்லாம் ஒன்னும் இல்லையே ஒழுங்காதான் பேசுறேன்" என்றான்
"சரி டா,நி வீட்ல பேசு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றதும்,,அதிர்ந்து போனவனாக !

"கல்யாணமா... ஹே...ய் என்னடி சொல்ற அப்புடியெல்லாம் என்னக்கு எண்ணமே கெடையாது,நி சும்மா இரு வீட்ல எதுவும் பேசிராத "

என நவீன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே,அவளின் மனதில் கண்ணீர் முட்டத்தொடங்கியது,
"அப்போ.....நெஜமாவே நி என்ன லவ் பன்னலயாட,என்கூட நெருக்கமா இருந்ததுக்கெல்லாம் என்னடா அர்த்தம்"
என கூறும்போது அவளின் மனதின் பாரம்,தொண்டையில் கனத்தது,

"ஹே .....ய் ,என்னடி பேசுற அது ஏதோ வயசுக்கோளாறுல நடந்தது,அதெல்லாம் எப்பயோ மறந்தாச்சு, நி தேவை இல்லாம பேசிக்கிட்டிருக்க நளினி"
என மிக சாதாரணமாக கூறிவிட்டு போனான்,
நவீன் தன்னை முழுவதும் பிரிந்து விட்டான் என  உணரும் போது,
தனிமைப்பட்டதாக தோன்றியது  நளினிக்கு,
யாருடனும் சரியாக பேசுவதில்லை,எந்நேரமும் கண்கள் சிவந்து அழுத படியே இருக்கிறாள்.

3.
நளினி தனிமைப்படுவதை,மகேஷால் நன்கு உணர முடிந்தது,
இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லை,நண்பர்களுடன் இருப்பதையும் தவிர்க்கிறாள்,
ஏன் என கேட்டால்,தன் உடல் நிலையை காரணம் சாடுகிறாள்,ஏதோ சோகத்தை மறைக்கிறாள் என தெரிந்து கொண்டான் மகேஷ்.

நளினி, தன் சோகத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டாள் என மகேஷ்க்கு தெரியும்,
ஆனாலும் மிகுந்த முயற்சிக்கு பின் ,தன்னிடம் பகிர்ந்து கொள்ளுமாறு செய்தான்,
ஆறுதல் அடையுமாறு செய்தான்,

முன்பு போல் நண்பர்கள் குழுவாக சந்திப்பதில்லை,
நளினியும்,மகேஷ் ம் தனியே சந்திக்க தொடங்கினார்கள்,நிறைய பேசினார்கள்.
நளினி ,தன் காதலை பற்றியும் ,நவினுடனான தன் நெருக்கத்தை பற்றியும் பகிர்ந்து கொள்ளத்தொடங்கினால்,

ஒரு நாள், மலைக்கோவில் சென்றிருந்தார்கள்,
நளினி ஏதேதோ பேசிக்கொண்டிருந்த சமயம்,திடிரென அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் மகேஷ்,
ஏன் இப்படி செய்தாய் என கேட்டதற்கு,
நான் உன்னை காதலிக்கிறேன் என்றான்,
ஏனோ எந்த பதிலும் பேசாமல்,கோபத்தோடும் ,கண்ணீரோடும் எழுந்து போனாள் நளினி.

கொஞ்ச நாட்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள் ,
இவர்கள் பேசாமல் இருப்பதை கண்டு,மகேஷின் நண்பர்கள்,அவன் காதல் தோல்வி  என ஏதேதோ கேலியாக பேசத்தொடங்கினார்கள் ,

ஒரு நாள் மிகுந்த கோபம்  கொண்டவனாக,அவளை தொடர்பு கொள்ள முயன்றான்,முடியாமல் போகவே நேரிடியாக அவளின் வீட்டிற்கே சென்றுவிட்டான்,அவளின் அப்பா,அம்மாவிடம் நான் உங்கள் மகளை காதலிப்பதாகவும், அவளும்  தன்னை காதலிப்பதாக சொல்லி சென்றான்,

இது உண்மையில்லை, உண்மையில் அவள் மகேஷுடன் நட்புறவுடன் பழகினால் என  அவர்களுக்கு தெரியும்,அப்படி இல்லாமல் அவளும் காதலிக்கிறாள் என்றால்,அதை தைரியமாக ஒப்புகொள்வாள்,இப்படி மனம் நொந்து அழுது கொண்டிருக்க மாட்டாள்  என்பதும் அவர்களுக்கு தெரியும்,

வேறெதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அழுது கொண்டிருக்கும் தன மகளை தேற்றுவதிலே தான்அவர்களின் எண்ணம் இருந்தது,

யாரிடமிருந்து யாருக்கு பரவியதோ தெரியவில்லை,
நண்பர்கள்,உறவுகள்,சுற்றம்  என யாரும் அவளை சரியாக புரிந்து கொள்ளாமல் புரளி பேசுவதிலே ஆர்வம் கொண்டிருந்தார்கள்,
அவளின் தோழிகளும் அவளிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தார்கள்.

மகேஷின் வீட்டிலும் கண்டிப்பு தான்,ஆண் பிள்ளைகளுக்கே உண்டான வாய்ப்பை கொண்டு,படிப்பு  என சொல்லி அவன் ஊரை விட்டே ஓடி விட்டான்,

நளினி தான் பாவம்,அழுது அழுது,அழுகையே தீர்ந்து விட்டது ,இறுதியாக தான் உயிர் வாழ தகுதி அற்றவள் என முடிவு செய்தாள்,

அவள் வீட்டில்  எலியை கொள்ளும் மருந்து  அவளையும் கொள்ளுமா என  அறியாமலே அதை உட்கொண்டாள்,
மயக்கம் தெளிந்து பார்க்கையில்,மருத்துவமணையில் சேர்த்திருந்தார்கள் ,

தன்னை தோளில் சுமந்து சென்ற தன் அண்ணனின் வேகம்,
தன் உடல் நலன் மீது அக்கறை கொண்டு அவளின் அருகிலே அமர்ந்திருந்த  அம்மா,
அவளின் தேவைகள் ,நிறை குறைகள் பற்றி தெளிவு கொன்டிருந்த அப்பா,
இவையனைத்தையும் தாண்டி,அவர்களின்  அன்பினை உணர்ந்து கொண்டாள் நளினி ,

இத்தனை நாள் சுதந்திரம் என சொல்லி கொண்டு கடும் குளிரில் சுற்றி வந்த பறவை,இன்று தன்  கூட்டினுள் இருக்கும் கதகதப்பினை அறிந்து கொண்டது,

தன் காதல்,கனவு,தேவை என எதை பற்றியும் அவள் கவலைப்படவில்லை,
அவள் பெற்றோரின் ஆசைப்படி மட்டுமே கல்யாணம் செய்து கொள்வதாக முடிவு செய்தாள்,

4.
தமிழகத்தின் ஏதோ ஒரு முலையில் இருந்து அவளுக்கான மாப்பிள்ளையும் கண்டுபிடிக்கப்பட்டது ,
அன்பான கணவன்,அதன் அடையாளமாக அழகான பெண் குழந்தையும் பிறந்தது,
அவள் வளர வளர அவளின் அழகும் வளர்ந்து கொண்டே போனது,

நளினி தன மகளின் அழகை கண்டு பயம் கொண்டாள்,அவள் செய்து கொள்ளும் ஒப்பனைகள் பதற்றம் கொள்ள செய்தது,

பிறகு தொட்டதற்கெல்லாம் கண்டிக்க தொடங்கினால்,
நல்ல உடையணிந்தாலும்,கொஞ்சம் கூடுதல் பேசினாலும் கண்டிக்கப்பட்டால்,

நளினி தன் மகளிடம் அன்பானவளாக தென்படவில்லை,ஆயினும் என்றாவது ஒருநாள் தன் மகள் தன்னை புரிந்து கொள்வாள் என அவளுக்கு தெரியும் ,

எல்லா  பெண்களும் கோபக்கார,கண்டிப்பான அம்மாவாக மாறிவிடுவதற்கு சில காரணங்கள் உண்டு.

                                                                                                                 - மீனா விக்னேஷ்

Thursday, April 26, 2012

பரினாமக்குறை

குரங்கினமும் கூட்டமாகத்தான் வாழ்கின்றது,
அதனிடம் நவீன தொழில்நுட்பம் இல்லை,
நியாயவிலை கடைகள் இல்லை,
அது போல அவைகள் தூக்கிலிட்டு தொங்குவதும் இல்லை.

தேனீயும்,எறும்பும் ஐந்தறிவு கொண்டவைகளாம்,
அவைகளைவிட குறைவாக சேமிக்கும் மனிதனுக்கு,
ஆறாம் அறிவு ஒரு சாபக்கேடு.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்,
ஆடு இன்னும் ஆடகவே இருக்கிறது,
ஆதலால் தான் அதை நாம் தின்று கொள்கிறோம்.

ஆபத்து என குரைக்கிறது ஒரு நாய்,
மற்றொரு நாய்க்கு அது புரியாமல் போகலாம்,
சுட சொல்லி ஆணை இடுகிறான் ஒரு மனிதன்,
மற்றொரு மனிதனுக்கு புரிந்து விடுவதால்,
செத்து மடிகிறது நாய்கள்.

-மீனாவிக்னேஷ் 

  

Monday, April 16, 2012

ஆறுதல் கூற வேண்டும்

1 .
புதுமைபித்தன்,சுஜாதா போன்றோர்களின் சிறுகதைகளை போலவே,என் கல்லூரி நண்பர்களின் வாழ்த்து மடல்,எத்தனை முறை படித்தாலும் சலிப்பதே இல்லை, அவர்களின் நினைவுகளை சுமக்கும் பொக்கிசங்கள் அவை.

என் நண்பர்களை,மிக மிக அன்பு மிகுந்தவர்களாய்,நெருக்கம் மிகந்தவர்களாய் மாற்றியது கல்லூரியின் கடைசி நாட்கள்.

என் கல்லூரியின் கடைசி நாள்,அந்த சிறிய கட்டத்திற்குள் அடைபடாமல் நெருக்கிக்கொண்டு கைகள் கோர்த்து,தோழில் சாய்ந்து நட்பின் மகத்துவத்தை தாங்கி நிற்கிறது,
இன்று ஒவ்வொருவரும்,பெரிய மனிதர்களாய் மாறியிருக்க கூடும்,ஆனாலும் குழந்தை சிரிப்போடு,யாதுமறியா பருவத்தை சுட்டிக்காட்டுகிறது ,நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

2 .
ஆரம்பம் முதலே ஏன் கடைசி நாட்களை பற்றி பேச வேண்டும்,முதல் நாளிலிருந்தே தொடங்கலாமே,
கல்லூரி நண்பர்கள் என்றதுமே என் நினைவுக்கு வருபவர்கள்,
மகேஷ்,பாலா, மற்றும் திவ்யா.
எங்கள் வகுப்பறையில்,இடது புறமாக முதல் ஐந்து வரிசைகளில் பெண்களும்,அதற்கு பின்னால் ஆண்களும் அமர்ந்து இருப்பார்கள், திவ்யா            ஐந்தாவது வரிசையிலும்,நாங்கள் ஆறாவது வரிசையிலும் அமர்ந்திருப்போம்.

நேரடியாக இரண்டாவது வருடத்திலிருந்து,மகேஷ்  எங்களுடன் சேர்ந்து கொண்டான்,சேர்ந்து கொண்ட முதலே நன்றாக பழகி விட்டோம்,

திவ்யா,மகேஷ்யே திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தாள்.
என் இப்படி பார்க்கிறாய் என கேட்டதிற்கு,மகேஷ் பார்பதற்கு தன் சகோதரனை போலவே இருப்பதாக கூறினால்.

பாலாவும்,நானும் சண்டை பிடித்து அண்ணனாகி கொண்டோம்,
உண்மையில் எங்கள் மூவருக்குமே, உடன் பிறந்த தங்கை கிடையாது.

கல்லூரியில் காதலி கிடைப்பவன் நிலை,எதுவோ எங்களுக்கு தெரியாது,
தங்கை கிடைத்தால் ,தங்கச்சி தங்கச்சி,என தினம் தினம்,பாசமலர் படம் காட்டுவது அலாதியான இன்பம் தான்,

திவ்யா அதிகமாக பேசமாட்டாள்,ஏதோ சொல்கிறாள் என்றால் அது என்னை கேலிக்குள்ளாகுவதாய் இருக்கும்,மகேஷ்ம்,பாலாவும் சிரித்து சிரித்தே அதை சிறப்பாக்கி விடுவார்கள்.

3 .
எனக்கு பிடிக்காத பாடவேளை என்றால்,நான் நன்றாக தூங்கி விடுவேன்,
வேண்டுமென்றே செய்வதல்ல,எதார்த்தமாக நடந்து விடுகிறது,

அவர்கள் எதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்,என்னால் அவர்களிடம் கவனம் செலுத்த முடியவில்லை ,
வழக்கம் போல் இல்லை,எவ்வளவோ அதிகமாக என் தூக்கத்தை கட்டுப்படுத்தி இருந்தேன்,ஆனாலும் என் கண்கள் சிவந்து,கன்னமெல்லாம் வீங்கி இருப்பதை என்னாலே உணர முடிந்தது,
இதனிடையில் வகுப்பாசிரியரால் கவனிக்கபட்டோம் போல,என் அருகிலிருந்த மகேஷ்-ஐ எழுப்பி,
"என்னடா சிரிக்கிறிங்க,சொல்லு எல்லாரும் சேர்ந்து சிரிப்போம்" என்றார்
சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தான்,அதனை தொடர்ந்து,

"திவ்யா எந்திரு,சொல்லு நியும் தான சிரிச்சிட்டு  இருந்த"என்றார்.
பிரச்சனை வேறு விதமாக செல்கிறதென உணர்ந்தவன்,
"விக்கி தூங்கி தூங்கி விழுகுறான் அதான் சிரிப்பா இருந்துச்சு"என்றான்,
பொருத்தமான பதில் ஆகவே ஆசிரியரின் நினைப்பு குழப்பத்திற்குள்ளானது,
எனக்கோ பெருத்த அவமானம், மொத்த வகுப்பறையும் சிரிப்பால் நிரம்பியது,
இதெல்லாம் கல்லூரி வாழ்கையில் சகஜம் தானே.

மகேஷ்ம்,திவ்யாவும், நான் அவமதிக்கப்பட்டதை நினைத்து மிகவும் வருந்தினார்கள்,அது குறித்து,எங்கள் வகுப்பறையின் பின்னால் பேசிக்கொண்டிருந்தோம்,


அதன் வழியாக கடந்து சென்ற ஆசிரியர்,வகுப்பறையில் கொண்ட சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக,
 எங்களை அழைத்து கண்டிக்க தொடங்கினார்,
"நிங்கல்லாம் படிக்கிறதுக்கு வறிங்களா,இல்ல இப்புடி கூத்தடிக்க வறிங்களா"
என்னும் வார்த்தைகளை தொடர்ந்து திவ்யா அழுகத்தொடங்கி இருந்தாள்,

அவர் மிதான எங்கள் கோபம்,இப்பிரச்சனையை மேலும் அதிகரிக்கவே செய்யும்,ஆகையாலேதிவ்யாவை சமாதானம் செய்வதே அவசியமென தோன்றியது.

4 .
இந்நிகழ்வை மறந்தபடியே சில தினங்கள் கடந்தன,எங்கள் வகுப்பிற்கு புதிதாக ஓர் ஆசிரியை வருகை அளித்திருந்தார்கள்,
வந்த முதல் நாளிலிருந்தே மகேஷ்,திவ்யா மீது ஓர் பார்வை இருந்தது,
ஒரு வாரம் கூட கழிந்திருக்காது,ரம்யாவை தனியே அழைத்து சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
என்ன நடந்ததென கேட்டதற்கு,நிண்ட அழுகைக்கு பின்னர் தான் அவளால் பதிலளிக்க முடிந்தது,
 "நீயும் மகேஷ்ம் லவ் பண்றிங்களா,எப்போ ஓடி போக போறிங்க"என கேட்டார்களாம்,
ஓர் ஆசிரியை இப்படியான சந்தேகத்துடன்,நல்லபடியாக பாடம் நடத்த முடிமா.

இனியும் பொறுத்தால் அவர்கள் கேட்டது உண்மையென ஆகிவிடுமே,எனவே அணைத்து மாணவர்களையும் வெளியே திரட்டினோம்,
நியாயம் கிடைக்காமல் உள்ளே செல்வதில்லையென முடிவு.

பாலாவின் கோபம் உச்சத்தை தொட்டிருந்தது,
ஏனோ என நின்று கொண்டிருந்த சில பெண்களை அவன் மிரட்டி கொண்டிருந்தான்,ரம்யாவின் உணர்வுகளை எங்கள் அளவிற்கும் அவர்களால் உணர முடியவில்லையா,ஆச்சர்யமாகத்தான் இருந்தது,

கல்லூரி முதல்வர் இந்த பிரச்சனையை மிக சுலபமாக முடித்து விட்டார்,
எப்படி எனக்கேட்டால்,மதிப்பெண் முக்கியமென கருதினால் வகுப்பறை உள்ளே செல்லலாம் என்றார்,ஒரு சில பெண்களை தொடர்ந்து மொத்த மாணவர்களும் உள்ளே சென்று விட்டார்கள்,

நடந்தவைகள் அறிந்து, திவ்யாவின் அப்பா முதல்வரை மிரட்டி எடுத்து விட்டார்,அவரின் பேச்சு உண்மையை உணரச் செய்தது,

அதனை தொடர்ந்து அந்த ஆசிரியையும் வெளியேற்றப்பட்டார்,

இது மாதிரியான சுழலை நிறையவே சந்தித்து கொண்டிருந்தோம்,

"நி மகேஷ்-ஐ  லவ் பண்றியா"எனும் கேள்வியை எதிர் கொள்ளும் போதெல்லாம் அவள் அழுகத்தொடங்கி விடுவாள்,
எங்களுக்கோ என்ன செய்வதென தெரியாது,ஆறுதல் கூறுவதை தவிர,

அவளிடம் கற்று கொண்ட பாடம்,ஆறுதல் கூறவும்,தேற்றுதலை அறியவும்,அன்பு கொண்டிருக்க வேண்டும்.

5
கல்லூரி முடிந்து ஒரு மாத காலமிருக்கும்,பாலாவும் நானும் மகேஷ்-ன் வருகைக்காக காத்திருந்தோம்,
மகேஷ்க்கும் தகவல் சொல்லியாகி விட்டது,தகவல் என்னவென்றால் ,
திவ்யா இறந்து விட்டால்,ஆம் ஏதோ ஒரு வாகனம் அவளின் சைக்கிள் மீது மோதி விட்டதாம்.

மகேஷ்ஐயும் அழைத்து கொண்டு,திவ்யா வின் வீட்டை அடைந்ததும்,
அவளின் காலடியில் விழுந்து,மார்பில் அடித்து கொண்டு அழத்தொடங்கினான்,

திவ்யாவை யாரேனும் தவறாக பேசி விட்டால்,மனமுடைத்திருந்த அவள் பெற்றோர்களால் தாங்கிக்கொள்ள முடியாது,

மகேஷ்ன் செய்கை அப்படி பேசச்செய்யுமா என பயந்து அவனை வெளியே அழைத்து வந்தோம்.

அவனிடம் என்ன ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை,இந்நிலையில்,

"மச்சான் திவ்யா பாவம் டா,அவ கூட யாருமே இல்லடா,நானும் போறேண்டா"என்றான்,
ரம்யாவின் பிரிவையே தாங்க முடியாத நிலையில் இவனும் ஏதோ செய்து கொள்வானோ என பதறத்தொடங்கியது மனம்,

அவன் வீடு வரை சென்று, அவனுடைய வீட்டினுள் எடுத்து சொல்லி பார்த்து கொள்ளும் படி கூறிய பின்னரே கொஞ்சம் சாந்தம் அடைந்தோம் ,

இறுதியாக 'என்னப்பா இவன் ஏன் இப்புடி அழுகுறான் ஏதும் லவ் மேட்டரா"என கேட்டார் மகேஷ்ன் சகோதரர்,

எங்களுக்கு வெறுப்பாகி விட்டது அவள் இறந்து விட்டால் ஆகினும் இந்த கேள்வி அவளை விட்டுவிட வில்லையே.

உடலை விட்டு பிரிந்தாலும்,அவள் ஆன்மா இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும்,அவள் அழுகத்தொடங்கி இருப்பாள்.
மகேஷ்-ஐ போலதான் நானும் உணர்கிறேன்.

வெகு நாட்கள் கடந்து விட்டது இன்றும் கூட ,எங்களிடம் ஏதேனும் வரம் கேட்க சொன்னால்,என்னை ரம்யாவிடம் கொண்டு செல் நான் அவளுக்கு ஆறுதல் கூற வேண்டும் எனக்கேட்போம்.

-மீனா விக்னேஷ் 
 













Thursday, April 12, 2012

கடவுளின் பொருள்

ஒரு வெளிச்சம்,ஒரு சுடர்,ஒரு தீபம்,
பலவாறு பிளவுற்று தீக்கோளமானது,
அது மேலும் பிளவுற்று கோள்கள் ஆனது,
கோள்கள் காற்றுடன் இணைந்து கரிமங்கள் ஆனது,
கரிமங்கள் உயிரை பெற்றது,
உயிர் இன்று மனிதன் வரை வளர்ந்து விட்டது,
இவையனைத்தும் செய்தது,
கிருஷ்ணன்,இயேசு,அல்லா,என்கிறார்கள்,
உண்மையில் தெரியவில்லை அது,
கடவுளின் பொருள்.

Tuesday, March 13, 2012

அவளும் இல்லை அவனும் இல்லை நான்

1
"அவளும் இல்லை அவனும் இல்லை நான்"
எனும் வார்த்தைகளுடன் என் முதல் கதையை முடிக்க போகிறேன்.


"மச்சான் இந்த லீவ் தான் டா கடைசி,அப்புறம் காலேஜ்,படிப்புன்னு ஆயிடும்.அதனால ஐஸ்வர்யா கிட்ட சொல்லியே ஆகணும் டா"


எனும் பிரதிப்-ன் வார்த்தைகளுடன் தொடங்குகிறது .
இனி நடக்கப்போகும் நிகழ்வுகள் அனைத்திற்கும்,நடித்து காட்ட வேண்டியது மட்டுமே பிரதிப் -ன் பொறுப்பு,
மற்றபடி கதை,திரைக்கதை,இயக்கம் எல்லாம் என்னுடையதே.


அடடா எதோ ஒன்று குறைகிறதே என பார்கிறீர்களா,அதென்ன பெரிய வசனம்,வெறும் முன்றே வார்த்தைகள் தானே,
அதனை பிரதிப் கூட பார்த்து கொள்ள முடியும்.

பிரதிப்-ன் காதலை, ஐஸ்வர்யாவிடம் சொல்வதற்கு சில திட்டங்களை வகுத்தோம்.

"அவளுக்கு இன்னும் எக்ஸாம் முடியலடா,எக்ஸாம் முடிஞ்சு போகும் போது அவ வீட்டு பக்கமா வச்சு மடக்கிடலாம் ஓகே யா"

"இல்ல மச்சான் அவ விடு பக்கம் நெறைய தெரிஞ்சவங்க இருக்காங்க,யாராவது பாத்துட்ட பிரச்சனை ஆயிடும்டா"

"அப்படின்னா ஸ்கூல் பக்கமா பாக்கலாமா?"

"ஓகே பாக்கலாம்.,அப்புறம் எப்படி பேசுறது ?"

"அவ சைக்கிள்-அ தான் வருவா,நம்மளும் ஒரு சைக்கிள் எடுத்துக்கலாம்,
நி சைக்கிள்-அ பின்னாடி ஒக்காந்துக்க,கூட்டம் கொறச்சல இருக்குற இடமா பாத்து,நா அவ பக்கமா சைக்கிள்-அ கொண்டு போவேன்,நி ரன்னிங்-லயே அவ கிட்ட சொல்லிடனும்  ஓகே யா"

"ஓகே....,"

ஏதோ அரை மனதுடன் ஒப்புக்கொண்டான் பிரதிப்.

கச்சிதமாக தேர்வு முடியும் நேரத்துக்கு முன்னரே,அவள் பள்ளியின் தெருமுனையில் நின்று கொண்டிருந்தோம்,

"மச்சான் அவ வற்ரா டா "

"ஓகே வா வா வா.............."

அவளின் வேகம் கொஞ்சம் அதிகமாய்த்தான் இருந்தது,
ஆனாலும் எப்படியோ சமாளித்து கொண்டு,அவளை நெருங்கி,சைக்கிள்-ஐ செலுத்த தொடங்கினேன்.

"டே சொல்லுடா.......,,,"அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை,

முன்னிருந்த படியே சைக்கிள்-ஐ செலுத்துவதால்,அவன் என்ன செய்கிறான் என பிடிபடவில்லை,
சொல்வதற்கு முயற்சிக்கிறான,இல்லை பயந்து கிடககிறான,அல்லது அவளை ரசிக்க தொடங்கி விட்டான,ஒன்றும் புரியாமல் வெறுப்பாகி விட்டது,
கூட்ட நெரிசலில்,நெளிவும் சுழிவுமாக அவள் வேகம் அதிகரித்து விட,
தடாலென சைக்கிள்-ஐ நிறுத்தினேன்.

"என்னடா செய்ற,சொல்லி தொலைக்க வேண்டியது தானே"

"பயமா இருக்குடா பேச்சே வரலடா,அவ விடு உள்ள போகும் போது என்னைய திரும்பி பார்ப்பா டா,வாடா போகலாம்"

இந்த வார்த்தைகளுக்கு எனது முகம் கொடூரமாக மாறிப்போனது.
பிரதிப் -னுடைய நிறைய கெஞ்சல்களுக்கு பின்,மிண்டும் அவளை பார்க்கலாமென,அவளின் விடு வாசலை,அப்படியும் இப்படியுமாக,பல முறைகள் கடந்து கொண்டிருந்தோம்.சலித்து போனது தான் மிச்சம்.

நாளை பார்க்கலாம் என பொழுதுகள் என்னிடம் கூறுவதை போல் உணர்தேன்,
2
மறுநாள்,என் தொலைபேசியில் முதல் அழைப்பே அவனுடையதாய் தான் இருந்தது .

ஐயோ இவன் தொல்லை தாங்க வில்லையே......,ஆனாலும் நண்பன் அல்லவா,என் மனதிடம் ஆறுதல் கூறிவிட்டு,சென்றேன்.

"என்ன மச்சான் பிளான் ரெடியா"

"பிளான் எல்லாம் ரெடி தான் நி சொதப்பாம இருந்த மட்டும் போதும்"

"ச்சி ச்சி,இன்னைக்கு ரொம்ப நம்பிக்கையா இருக்கேண்டா சொல்லியே தீருவேன்"

"ம்ம் பாக்கலாம் என்ன பண்றன்னு !"

"ஓகே டா நி பிளான்-அ சொல்லு"

"ஓகே நல்லா கேட்டுக்கோ,பெருமாள் கோவிலுக்கு பின்னாடி ரெண்டு வளைவு,இருக்கு நடுவுல சின்ன இடம் தான்,அந்த எடத்துல,அவ வற்ற நேரம் பார்த்து.
அவ வழிய மறிச்சு நான் கிழ விழுந்துடுவேன்,அதனால அவ கொஞ்ச நேரம் நிக்க வேண்டியது வரும் அந்த நேரத்துல நி அவ கிட்ட பேசிடனும்.ஓகே யா?"

"இல்ல மச்சான் எதுக்கு கிழயல்லாம் விழுந்துகிட்டு,கொஞ்சம் கஷ்டமா இருக்குமேன்னு யோசிக்கிறேன்."

"எனக்கு என்னடா கஷ்டம் நி தான அவ கிட்ட பேசப்போற"

"ஓ.! அதுவும் சரிதான் உனக்கு கிழ விழுந்து அடிபடும்,எனக்கு விழுகாமலே அடிபடப்போகுது,சரிதானே"

அட்டகாசமான சிரிப்புக்கு பின் மிண்டும் எங்களை திட்டத்துக்கு தயார் படுதிக்கொண்டோம்.
நினைத்த படியே,எல்லாம் சரியாக நடந்தது,அவள் வளைவை கடந்ததும்,இடை மறித்து நான் கிழே விழுந்து விட்டேன்.
அவள் அவளுடைய தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள்.
நான் விழுந்து கிடப்பது,எங்கள் வீட்டு மெத்தையில் அல்ல,ஆகவே சீக்கிரம் எழுந்திருக்க வேண்டிய அவசியமாயிருந்தது.
அந்த சீக்கிரம் ,பிரதிப்-க்கு போதுமானதே,ஆனாலும் அவன் அதை உபயோகப்படுத்தவில்லை.
கோவிலின் மதில் சுவரில் யாராலும் மறைந்து கொள்ள முடியாது,ஆனாலும் மனதளவில் அவன் மறைந்து நின்று கொண்டிருந்தான்.

'லூசட நி உனக்காக தானே நடு ரோட்டல விழுந்து கெடக்குறேன்,சொல்லி தொலைக்க வேண்டியது தானே."

"இல்ல மச்சான் அவளோட friends எல்லாம் என் தங்கசிக்கு தெரிஞ்சவங்கடா,போட்டு கொடுத்துருவாளுகடா."

"ஆமாண்டா இத மட்டும் நல்ல வக்கனையா பேசு,மானங்கெட்ட பொழப்புடா, ச்சி....."

"ஏன்டா கோவப்படுற,பிளிஸ் டா மன்னிச்சிருடா மச்சான்"

"நா  மன்னிச்சா மட்டும் போதுமா,எப்போதான் சொல்லப்போற,எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு போச்சு,கடைசி சான்ஸ்ஐயும் மிஸ் பண்ணிட "

"இல்லடா திருவிழா வருதில்ல அப்போ பாத்துக்கலாம் டா"

"ஆமா திருவிழா நேரத்துல,சாமி பின்னாடி சுத்தாம,அவ பின்னாடி சுத்த சொல்றியா"

"ப்ளீஸ் டா,மச்சான் நி இல்லாம முடியாது டா ப்ளீஸ்"

"இல்ல டா எனக்கு நம்பிக்கை இல்ல,நி சொதப்ப தான் போற"

"கொறஞ்சது ஒரு போட்டோ எடுக்கணும் டா,அத பாத்துகிட்டே கூட இருந்துடுவேண்டா"

"ஓகே டா,யோசிச்சு சொல்றேன்."

யோசிக்க அதிக நாட்கள் இல்லை,கூடிய சிக்கிரமே திருவிழாவும் வந்து விட்டது,
கடைசியில் குறைந்தபட்ச தேவை எனக்கருதிய புகைப்படம்,அதிகபட்ச தேவையாகிப்போனது.


"மச்சான் ஒரே கொழப்பமா இருக்கு டா,என்னடா பண்ண போறோம்?"


"அதெலாம் நி ஏன் யோசிக்கிற,பிளான் ரெடி"


"என்னடா சொல்ற!,எப்படி?"


"சாமி ஊர்வலம் அவங்க வீட்டு வாசல கடக்கும் போது,போட்டோ எடுத்திடலாம்,ஓகே யா"


"இல்ல மச்சான்,வெளிய தெரிஞ்ச பெரிய பிரச்சனை ஆயிடும் டா,அடிச்சு கொன்றுவாயிங்க"


"பயப்படாத,அதெலாம் நா பாத்துகிறேன்,நி கேமராவ மட்டும் ரெடி பண்ணு"


மிகச்சில தினங்கள் மட்டுமே மிச்சமிருந்தன,நாட்கள் கடந்து,கடந்து கடைசி மணிநேரங்கள் வரை கடந்து விட்டோம்.
பிரதிப்,நான்,பாலா என மூன்று முட்டாள்கள்,அவளின் வருகைக்காக,அவளின் வீட்டு வாசலின் எதிரில் காத்திருந்தோம்.
சாமியோடு சேர்த்து அவளையும் படமெடுக்க,எந்த வாய்ப்பும் சிக்கவில்லை.
புகைப்பட காரர்களை விட அதிகமான கோணங்களில் முயற்சித்தாகி விட்டது,
இறுதியில் அதீத துணிச்சலுடன் சற்று தள்ளி நின்று,அவள் முகம் படுமாறு,ஒரே அழுத்து,வேலை முடிந்தது,
அதே சமயம் அவளின் குடும்ப நபர் ஒருவனால் கவனிக்க படுவதையும் உணர்ந்தேன்,அது அவளின் சித்தப்பா.
கூட்டம் சற்று,கலைந்தாலும்,நாங்கள் பிடி படுவது உறுதி,அந்த சிறிய இடைவேளையை,உபயோக படுத்தி கொண்டேன்.

"மச்சான் மாட்டிகிட்டோம் டா"


"என்னடா சொல்ற !!...??"


"ஓகே பரவாயில்லை,நி ஓடு,ஏதோ நா பாத்துகிறேன்"


புகைப்பட கருவியின்,சேமிப்பு பகுதியை பாலாவிடம் கொடுத்துவிட்டேன்.


அவளுடைய சித்தப்பா,என்னை தடதடவென வீட்டினுள் இழுத்து சென்றார்,
எந்த கேள்வியும் இன்றி கன்னத்தில் ஓர் அரை விழுந்தது,அதற்குள் அங்கே நண்பர்கள் கூடிவிட்டதனால்,அவரை தடுத்தி நிறுத்தினார்கள்.


"யோவ்.....எதுக்குய அடிக்கிற"


"எங்க வீட்டு பொண்ண போட்டோ எடுக்குறான் யா...இந்த பய"


"அதெலாம் இல்லங்க,இதுல போட்டோல்லாம் எடுக்க முடியாதுங்க,சும்மா தேவையில்லாம சந்தேகப்படாதிங்க"


"டே சும்மா பேசாதட,உங்களைப்பத்தி எனக்கு தெரியாத,தெருப்பொறுக்கி பயலே"


"அதிகமா பேசாதிங்க,உங்க பொண்ணு போட்டோ,கேமராவுல இருந்த மட்டும் பேசிக்கலாம் ஓகே யா"


"ம்ம் குடு பாக்கலாம்,நானும் உன் வயசெல்லாம் பாத்தவன் தான் டா "


கருவி கைமாறியது.
"நி உங்க அப்பாவ கூப்ட்டு வா,அவர்கிட்ட பேசிட்டு கேமராவ தரேன்"


"ஐயோ இது என் friend கேமராங்க !"


"யாரு அந்த பிரதிப் பயலா,அவனையும் கூட்டியா,கொஞ்சம் பேச வேண்டியதிருக்கு."


என்ன செய்வதென்றே தெரியவில்லை,பிரதிப்-ஐ தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்தேன்,வெகு நேரமாய் சிக்கவில்லை,ஆகையால் என் அப்பாவிடம் சொல்லி ஏதேனும் செய்யலாம் என தோன்றியது.
நான் வீட்டிற்கு செல்லும் முன்னே,நடந்தவைகள் யாவும் வீட்டிற்கு தெரிந்திருந்தது.


"ஏன்டா மவனே எவனோ,ஒருத்தன் லவ்-க்கு நீ அடி வாங்கிட்டு  வந்து நிக்கிற"

என்று நடந்ததை அப்பாவிடம் விவரிக்கும் முன்னே, அவர் என்னை திட்ட தொடங்கினார்.

"சரிப்பா நீ வந்து கேமரா வாங்கி கொடு".

"இல்லடா உன்னை அடிச்சதுக்கே அவங்க கிட்ட கேட்க தான் வேணும் , பிரதீப் - ஆ இல்லாம நீ லவ் பண்ற பொண்ண இருந்தா இன்னிக்கே கல்யாணம் பேசி முடிச்சிருப்பேன் டா, அவனுக்காக நம்ம ஏன்டா போயி பேசணும் ", என்றார் .

இதனிடையில்,பாலாவின் மூலம் ஐஸ்வர்யாவின் விட்டிற்கும் உண்மை யாவும் தெரிந்திருந்தது.

பிறகு , எப்படியோ பிரதிப்-ஐ தேடி கண்டு பிடித்துவிட்டேன் , திருவிழா நேரம் என்பதால் எங்களுடன் நெறைய நண்பர்கள் கூடி இருந்தார்கள், மீண்டும்
ஒரு முறை அவளின் விட்டிற்கு சென்று பேசிப்பார்பது என்று முடிவு செய்தோம்.
போகும் வழியிலே,பெருவாரியாக அனைவரும் கழன்று விட்டிருந்தார்கள்.
இறுதியாக நானும், பிரதிப் மட்டுமே மிஞ்சி இருந்தோம்.
அதீத தைரியத்துடனே,அவளின் வீட்டு வாசற்படியை மிதிக்க வேண்டியதிருந்தது.
நல்ல வேலையாக அவளின் சித்தப்பா விட்டினுள் இல்லை.


"என்ன தம்பி உங்க அப்பாவ கூட்டி வரசொன்ன இந்த பயல கூட்டியந்துருக்க?"

"இல்லங்க கேமரா இவனோடது தான்,அதான் பேசிப்பாக்கலாம்னு...."

"இல்ல தம்பி கேமரா,யாரோடத இருந்தாலும் அவங்கவங்க அப்பாவ கூட்டி வாங்க பேசிக்கலாம்" என்றார் அவளின் தந்தை.

வேறேதும் பேச திறனில்லாதவர்களாய்,வெளியேறினோம்.
நாங்கள் வெளியேறவும்,அவளின் சித்தப்பா கண்ணில் படவும் சரியாக இருந்தது.
அவளின் சித்தப்பா,மிகுந்த கோபத்துடன் பிரதிப்-ஐ அடிக்க துரத்தினார்,
அந்த ஓட்டத்தில் தொலைந்தவனை,பிறகு கண்டு பிடிக்கவே முடியவில்லை.
தொலைபேசியில் முயற்சித்தபோது,தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் எனத்தெளிவாக கூறியது.


கிட்டதட்ட  ஆறுமாதங்கள் கழித்து அவனை மிண்டும் சந்தித்தேன்.



"மச்சான் எப்புற்ற இறுக்க?,பாத்து ரொம்ப நாள் ஆச்சேடா"

"ஆமாண்டா மச்சான் வீட்டுல கொஞ்சம் பிரச்சன அதான் ஊர்லையே இல்லடா"

"அப்பறம் ஐசு எப்புடி இருக்கா,இந்த தடவ கண்டிப்பா சொல்லிரலாம் ஓகே யா"

"இல்ல டா மச்சான் ,அதெல்லாம் வேணாம்,அவளப்பத்தி ஒரு மேட்டர் இருக்கு'

"என்னடா மேட்டர் ?"

"எந்தங்கச்சி கிட்ட சொல்லி,ஐசு நம்பர் வாங்கிட்டேன் டா,எனக்கு பயமா இருந்துச்சு,அதான் என் காலேஜ் friend கிட்ட சொல்லி அவ கிட்ட பேச சொன்னேன் ,கொஞ்ச நாள்ல அவங்க ரெண்டு பேரும் நல்ல friends ஆயுட்டாங்க,
அந்த பையன் சொல்றான் ஐசு சுத்தமா சரி இல்லையாம்டா,அது ரொம்ப அசிங்கம பேசுதான்,
அவ சரியான அய்ட்டம்-னு (பரத்தை போலானவள் ) சொல்றான் டா,அதான்
வேணாம்னு விட்டுட்டேன் மச்சான்"

இப்படியான வார்த்தைகளை கேட்டதும் எனக்கு ஏதோ தலை சுற்றுவது போல் ஆகிவிட்டது,
ஏதோ பெரிய தவறு செய்து விட்டதாக,என் மனம் என்னை அழுத்த தொடங்கியது,யாரிடமாவது சொல்லி ஆறுதலடைய வேண்டும்,
ஆதலால் தான் இதை கதையாக எழுத தொடங்கினேன்.
முதலில் நான் கூறியதை போல,
காதலால் தோற்றது,அவளும் இல்லை அவனும் இல்லை நான்.
எனும் வரிகளுடன் முடித்து கொள்கிறேன்.
                                                                                                என்றும் அன்புடன்
                                                                                                        சரவணன்
- மீனாவிக்னேஷ்







Friday, February 24, 2012

லட்சியம்

உலகம் முழுக்க,தனக்கு தானே பெயர் சூட்டி கொண்ட ஒரே மிருகம் மனிதன் மட்டும் தான்,சிலர் தங்களை மன்னர்கள் எனவும்,விவசாயிகள் எனவும்,தொழிலாளர்கள் எனவும் கூறிக்கொண்டார்கள்,
மேலும்,தனக்கென தனித்தனியே ஒரு  பெயரும் கொண்டிருந்தார்கள்.
இவர்களிடையே,தன் பெயரே தெரியாத மனிதன் ஒருவன் இருக்கிறான்,
நிஜமாகவே, பெயர் என்றால் என்னவென அவனுக்கு தெரியாது.

நிச்சயமாக ஏதேனும் கோவில் மண்டபத்திலோ,குகை வடிவிலான வீட்டில் தான் பிறந்திருக்க வேண்டும்,
பிறகு பெற்றெடுத்தவர்கள் யார் ?,அவர்கள் எங்கே ?,
யாருக்கு தெரியும் பெயர் கூட தெரியாதவனுக்கு இவையெல்லாம் தெரித்திருக்க வாய்ப்பில்லையே.

அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவன் படுத்துறங்கும் கோவில் குளத்தின் படிக்கட்டுகள்,கூடுதலாக நிச்சல் அடிக்கவும் பழகி இருந்தான்,
அடிக்கடி குளத்தில் தவறி விழும் போதெல்லாம் அவனை காப்பாற்ற தேவைப்பட்டதால்.
இப்படியும் ஒரு மனிதனா என வியந்தால் !,ஆம் நிச்சம் மனிதன் தான்,
ஏனெனில் அவனுக்கும் பசிக்கிறது,மனிதர்களை போல தான் அவனும் உண்கிறான்.
நிறைய சமயங்களில் ,தானே முன்வந்து அவனுக்கு உணவு இடுகிறார்கள்,
ஒரு நாள் யாரும் உணவு தரவில்லை.
அருகிலிருக்கும் கடையில் தன் கையை நீட்டுகிறான் வழக்கம் போல,
வெகு நேரம் ஆயினும் யாரும் அவனை சட்டை செய்யவில்லை,எனில் உணவு கிடைக்காது என அவன் புரிந்து கொள்வதற்குள் அவன் கைகளை பிடுத்து தள்ளி விடுகிறார் கடைக்காரர்.
பசிக்கும் நேரத்தில் எதிர்பாரததை பெறுவது இதுவே முதல் தடவை,
என்ன செய்வதென அறியாதவனாய் சற்று தொலைவு நடக்கிறான்.தன் பசியை போக்கியே ஆக வேண்டும், முதல் முறையாக உணவு தேடி செல்கிறான்,

அது அந்த கோவிலின் முன் பக்கம் தான் ஆயினும் இந்த நாள் வரை அங்கே சென்றதே இல்லை.
நல்ல வேலை,அங்கே தானமிட்டு கொண்டிருந்தார்கள்,பெயர் தெரியாத இந்த மனிதனை தவிர தானம் பெற தகுதியானவர் யார்?,
தன் இரு கைகளிலும் தானம் பெறுகிறான்,போதவில்லை மிண்டும் தன் கைகளை நீட்டுகிறான்.ஒருமுறை,இறுமுறையாயின் சரி மிண்டும் மிண்டும் தானமிடுவதற்கு அவர்கள் என்ன பரமபிதாக்களா?,
அவன் கைகளை பிடித்து தள்ளி விடுகிறார்கள்.

பரவாயில்லை,பசி அடங்கி விட்டது,தன் பழைய இருக்கையை தேடி அலைபவனிடம்,
"என்ன சாப்பாடு வேணுமா" எனக்கேட்கிறார் ஒருவர்,அவனால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை,
அவன் முக பாவனையை கொண்டு,பிறவி ஊமை எனக்கருதி,சைகை செய்து காண்பிக்கிறார்,
புரிந்தும்,புரியாதது போல தலையாட்டுகிறான்.
"அதோ பாரு ஒரு குதிரைவண்டி போகுதா அதுல தான் சாப்பாடு இருக்கு"என்கிறார் அவர்.
அடுத்த முறை பசிக்கையில் அதை உண்ணலாம் எனும் நோக்கில்,வண்டியை விரட்டி ஓடுகிறான்,
அதன் வேகத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது எனும் உண்மையை உணரும் முன்னரே,அந்த வேகம் அவனை தடுக்கி விழச்செய்கிறது,
முகம் முழுக்க ரத்தக்காயம் ஆயினும் அவன் பார்வையெல்லாம் வண்டியையே நோக்கியிருந்தது,அது ஒரு நேரான சாலை என்பதால்,அந்த வண்டி நுழையும் வீட்டினை அவனால் காண முடிகிறது,தூரத்தில் இருந்து பார்கையில் அது விடு போல தெரிந்தாலும்,அருகில் சென்றதும் அது அரண்மனையாக மாறிப்போனது,
அரண்மனைக்குள் காரணமின்றி யாரும் நுழைய மாட்டார்கள்,ஒருவேளை அவன் முகத்தில் பயம் காட்டியிருந்தால்,
யாரேனும் அவனை சந்தேகிக்கும் வாய்ப்பு உண்டு,தான் செய்யவிருக்கும் பயங்கரம் அறியாதவன் முகத்தில் பயம் எப்படி இருக்கும்.

காவலாளிகள் உடையணிவதை காண்கிறான்,அவன் அணிந்துள்ள உடையோ ஆங்காங்கே கிழிந்து கிடக்கிறது எனவே காவலாளிகள் உடையை இவனும் அணிகிறான்,அணைவரும் ஆயுதம் ஏந்துகிறார்கள் ஆகையால் அவனும் ஏந்துகிறான்,இப்படியே சுற்றி திரிகையில்,அந்தக்குதிரை வண்டி ஏந்தி சென்ற ஜாடிகள் அவன் கண்ணில் படுகிறது,அதில் முழுக்க தங்கக்காசுகள்,தன் மனம் நிறைய அள்ளிக்கொண்டு,பழைய இடத்தை தேடி செல்கிறான்,சௌகரியமாக அதில் அமர்ந்தவாறு அக்காசுகளை மென்று பார்க்கிறான்,கடித்து பார்கிறான்,விழுங்கி பார்கிறான்,முடியவில்லை இதனை உண்ண முடியாது என முடிவு செய்து அதை தூக்கி எறிவதற்குள் காவலாளிகள் படை அவனை சுற்றி வளைத்துக்கொண்டது அரசனுடைய பார்வையில் குற்றவாளியாக நிறுத்தப்படுகிறான்,
மிகுந்த கோபம் கொண்டிருந்த அரசன் இவன் முகத்தை பார்த்ததும்,திட்டமிட்டு திருடவில்லை என உணர்கிறார்,ஆயினும் தன் கோபம் அடங்கும் பொருட்டு நிறைய கேள்விகள் எழுப்புகிறார்,
அத்தனை கேள்விகளுக்கும் மௌனமே பதிலாய் இருக்கிறது,அரசன் முன்னிலையில் அம்மௌனம் அவமறியதையானது.ஆனாலும் அவனுக்கு அவமதிக்கவும் தெரியவில்லை ஆகையாலே அவன் மனநோயாளி என முடிவு செய்யப்படுகிறது.
மனநலக்காப்பகம் ரம்மியமான சுழல் நிறைந்தது,காற்றோட்டமான அறைகள்,நிறைவான உணவு,நிம்மதியான படுக்கை வசதி.
இத்தனையும் கொண்டவன்,கனவுகளில் ஆழ்கிறான் அக்கனவுகள் மனித இயல்புகளுக்கு அப்பாற்ப்பட்டது,அக்கனவுகள் லட்சியமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
                                                                                                                   -மீனாவிக்னேஷ் 


Friday, February 17, 2012

நண்பனின் கதை

நண்பர்கள் அனைவரும்,அன்று கதை பேசிக்கொண்டிருந்தோம்,
திரைப்பட உதவி இயக்குனர்கள் ஆதலால், கதை பேசுவதில் ஆர்வம் அதிகமே,
அதிலும் குறிப்பாக என் நண்பன் பாலு,
அன்று மட்டும் ஏனோ பாலு மௌனமாகவே இருந்து கொண்டிருந்தான்,
கதை கூற சொல்லி கட்டாயப்படுத்தியதில்,இப்படியாக தொடங்கினான்,

"மச்சான் எனக்கு மூடே இல்ல, எதோ நீங்க கம்பெல் பண்றதால சொல்றேன்,
பட் நீங்க நெனைக்கிற மாதிரியான கதையா இருக்காது,
கொஞ்சம் சோகமா,அழுத்தமா இறுக்கும்,
ஆக்சுவலி  இது எங்க அப்பாவோட கதை,
ஓகேயா சொல்லவா வேணாமா?"

கொஞ்சம் கடினமான கேள்வி தான்,!
சோகமான கதை கேட்கும் மனநிலை யாருக்குமே இல்லை ,ஆனாலும் பாலுவின் மன ஆறுதலுக்காக கேட்க தொடங்கினோம்.

அவனுடைய அப்பா,அதிகமாக மது அருந்துவாரம்,
ஒவ்வொரு நாளும்,எதோ ஒரு தெரு முனையில்,சாக்கடைகருகில்.
அநாகரிகமாக படுத்துக்கிடப்பாராம்,

ஒரு நாள்  அடிபட்ட தன் தந்தையை ,வண்டி ஒன்றில் ஏற்றி கொண்டிருந்தானாம்.
உதவிக்கு வந்தவர்களை அவர் கண்டபடியும் திட்டி விட,கோபம் கொண்ட அவர்கள்,அவரை அடிக்க தொடங்கினார்களாம்,அதனை தடுக்க முடியாத தன் நிலைமையை,வார்த்தைகளால் விளக்க முடியவில்லை அவனால்.


தன் நண்பர்கள்,உறவினர்கள் எல்லாரிடமும் அவன் அப்பா கடன் வாங்கியிருப்பாரம் ,அவரது பொய்யான வாக்குறிதிகள்,ஏளனப்பார்வைகளாக இவன் மீது தான் வந்து விழுமாம்.


திடிரென்று ஒரு நாள், தன் மகளின் திருமணத்திற்கு பணம் சேர்த்து வருவதாக கூறியிருந்தாராம்,மகிழ்ச்சியான விஷயம் தான் ஆனாலும் அவர் சேமிப்பிலிருந்து வெறும் 2000 ருபாய் மட்டுமே அவர்களால் பெற முடிந்ததாம்.


தன் சொந்த மகளின் திருமணத்தில்,யாரோ ஒரு மூன்றாவது மனிதரை போல்
சுற்றி வரும் தன் தந்தையை காணும் மகனுக்கு சந்தோஷம்,சிரிப்பு எப்படி இருக்கும்.


தன் தங்கையின் திருமணத்தை சித்தப்பா மார்களால் தான் நடத்தி முடிக்கப்பட்டதாம் ,
நன்றி கடனுக்கே வட்டி கொடுக்கும் காலம் இது,இந்நாணய கடனை மட்டும் விட்டுவிடுமா என்ன ? அடைக்க தான் வேண்டும் எனில் அதன் ஆதாரம் என்ன?
நன்றாக படித்தானே தவிர,நிறைய படிக்க வில்லையே.

இறுதியாக அவன் அப்பா இறந்த விதத்தை கேட்கவே கடினமாய் இருந்தது.
அதிகமாக மது அருந்தி,உயர் ரத்த அழுத்தத்தில் மாறு கால் மாறு கை இழுத்து கொண்டு,இனி உயிர் பிழைக்கவே முடியாது எனும் நிலையில் படுத்த படுக்கையாக ஐந்தாறு நாட்கள் விட்டிலே கிடந்தாராம்,
கடைசி ஆசையாய் இருக்குமென,அவர் விரும்பி அருந்தும் மதுவை சொட்டு சொட்டாக அருந்த செய்தார்களாம்,ஆயினும் அவர் உயிர் விட வில்லை,
பிறகு எப்படி வலுக்கட்டாயமாக மூச்சு அடைக்கப்பட்டு தன் உறவுகளாலே கொல்லப்பட்டிருக்கிறார் .


கதை முடியும் நேரம் அனைவரின் வருகையும் நிறைவு பெற்றிருந்தது,
"சியர்ஸ்" எனும் வார்த்தையில் மது குவளைகள் மோதும் சப்தத்துடன் தொடங்கி,அதே குவளைகள் உடையும் சப்தத்துடன் முடிவு பெற்றது,
பாலுவின் பிறந்தநாள் விழா.


-மீனா விக்னேஷ் 

Sunday, February 12, 2012

உயிரின் விலை

பணம் கொடுத்து,பற்ற வைத்தேன் என்றால்,
கேவலமாக என் விரல்களுக்கு நடுவே,
மெல்ல மெல்ல இறந்து போகும்,
என் உயிரின் விலை ஐந்தரை ருபாய்,


Sunday, January 29, 2012

படபடப்பு

மூளை  அவளை பார்க்க சொல்கிறது,
பேச சொல்கிறது,விரும்ப சொல்கிறது,
அனிச்சையாய் அவள் வரும் பாதையில்,
தலை தானாய் திரும்ப சொல்கிறது,
ஆனால், இதயம் மட்டும்,
வெறுமென துடிக்க மட்டுமே செய்கிறது,
கடைசியாய் அதன் படபடப்பில் கலந்து விடுகிறது என் காதல்.

-மீனா விக்னேஷ்

Saturday, January 21, 2012

போராட்டங்கள்

மனிதன், முழுவேகத்தில் போராடி கொண்டிருக்கிறான்,
மிருகங்கள்,காடுகள்,வயல்வெளிகள்,
இவைகளையெல்லாம் வென்றுவிட்ட களிப்பில்,

இனி போராட துடிப்பது,
கலாச்சாரம்,மனிதநேயம்,மனிதன்,
இவைகளையும் வெற்றி கொண்டால்,
பூமியில் இல்லாமல் போவது மனிதஇனம் தானே,

இது மனிதனுக்கு இல்லை என்றாலும்,
பூமிக்கு நற்செய்தியே,வாழட்டும் பூமி,
விடைபெற தயாராகுங்கள் மனிதர்களே.

-மீனாவிக்னேஷ்    

வேதம்

வேதங்கள் எழுதியது யார் எனத்தெரிந்தால்,
நான் அவரை விடவும் பெரியவன்,
எனக்கூறும் மனிதன் பிறந்து விடுவான்,ஆகையாலே,
அது கடவுள் எனக்கூறுகிறது வேதம்.
                                               
                                                                   -மீனா விக்னேஷ்