Wednesday, March 6, 2013

வெட்டிபேச்சு 2 ( தொடர் )

காதலின் வரலாற்று பக்கங்களின் ஒவ்வொருவரும் ராஜாக்களே , ராஜ்யங்கள் ராஜாக்களை ஆள்கிறது . இனி நான் அறிந்த சில வரலாற்று பக்கங்களைப் பற்றி பேசுவோம்.
என் பள்ளி பாடத்தில் அப்துல்காலம் பற்றின ஓர் உரைநடை பகுதி இருந்தது,
அதில் "ஒரு மனிதன், எத்தகைய  சூழ்நிலையிலும், எந்த ஒரு சாதனையையும் செய்துவிட முடியும் அதுவே உள்வளத்திறமை என்பது" எனச் சொல்லியிருப்பார்,
அதே போல "கனவு காணுங்கள், கனவுகளை நனவாக்க நாள்தோறும் முயலுங்கள்" என்பது அவர் பொன்மொழிகளுள் ஒன்று.

உண்மையில் நம் இளசுகள், உள்வளத்திறமை மிக்கவர்களாகத் தான் இருக்கிறார்கள், நிறைய கனவும் காண்கிறார்கள். ஆனால்அவர்கள் பயிலவும், போராடவும் துடிக்கும், கடினமான பாடமாகிறது காதல் 

யாரிடமாவது ஓரிரு நாட்கள் நட்பாக பழகினால் போதும் "அப்பறம் நீங்க யார லவ் பண்றிங்க ?" எனும் கேள்வி எழாமலிருக்காது,
கொஞ்சம் வயது கடந்த பின்பு " அதெல்லாம் இல்லங்க" எனும் பதில், பொதுவானதாக தெரியலாம் ஆனால் பதின்பருவத்தில் அப்படியில்லை, தாழ்வுமனப்பான்மை மிக்கதாகவும், வெகுளித்தனமானதாகவும் தோற்றமளிக்கும் அப்பதில்.

அப்படியான பதின்பருவத்தில்,என் பள்ளி தோழன் ஒருவன், மகா கலைஞனாக இருந்தான், எந்த பெண்னையும் தன்னால் மடக்கிவிட முடியும் என்பது அவன் கலை வடிவம். சில நிகழ்வுகளில் அதை நிரூபித்தும் காட்டுவான்.

பதின்பருவம் கடந்து, வயது கூடவே, அவன் கலையை மெல்ல அவமதிக்க தொடங்கியபோது  அவனே சில சூழ்ச்சிகளை அவிழ்க்கத் தொடங்கினான்.

ஒரு பெண் கேட்குமாறு தொடர்ந்து தன் மிதிவண்டி மணியொலிக்க வேண்டும், செய்வது யார் என தெரியும் படி அவளின் முன்னும் பின்னுமாக, சில நாட்கள் வரை  வட்டமடித்து தொடர வேண்டும், கடைசியாக அரங்கேற்ற நாள்.
கூடியிருக்கும் நண்பர்களுக்கு, தன் காதலி என அவளை அடையாளம் காட்டுவான்,
இத்தனை நாள் வரை தன்னை தொடரும் மணியோசையை, அவள் அன்றும் எதிர்பார்த்திருப்பாள், எனவே முதல் மனியோசையே அவளை புன்னகையுடன் திரும்பிப் பார்க்க செய்யும், இதற்கு மேல் அனைத்தும் நம் கற்பனையே.

பெருமிதம் கொண்ட அவன் முகம், அவளின் வெட்கப்புன்னகை, எண்களின் வியந்த கண்கள், மூன்றும் புகைப்படங்களாக, பிரமாண்டமாக மனத்திரையில் விரியும்.

அவன் எங்களிடத்தில் ஹீரோ-வாக போதுமான அம்சம் அவை,
அடுத்த நொடிய வேறு ஒரு திசையில், வேறு பெண்ணை தேட தொடங்கிடுவான். தமிழகத்தையும், இந்தியாவையும் காப்பாற்றிய ஹீரோக்களை விட, காதலில் உருகி வழியும், ஹீரோக்களே பதின்பருவ மனதில் கச்சிதமாக பதிந்தார்கள்.
இதில் என்ன பரிதாபம் என்றால், இத்தகைய செய்கைகளை, காதல் என நம்பி ஏமாறும் பெண்களும் உண்டு.
காதல் ராஜ்யத்தில் ,வெறுமென கத்தி சுற்றுபவர்களையும், குதிரை பயணம் செய்பவர்களையும் அலெக்ஸாண்டராக ஏற்று கொள்கிறார்கள் சில அரசிகள் 


இப்படித்தான் என காதலை விவரிக்கவே முடியாது,சில காதல் கண்டதுமே கொண்டதாய் இருக்கலாம், சில பழகி பிறந்ததாய், முதிர்ச்சியில் முளைத்ததாய், சில செல்ல சண்டைகள் சார்ந்ததாகவும் இருக்கலாம்.

நான் அறிந்த முதல் ஹீரோ, அப்பாவுடனும் ஓர் காதல் சரித்திரம் இருக்குமென தோன்றியதில்,

எல்லோரிடமும் கேட்பது போலவே, எதேர்சியாக அப்பாவிடமும் கேட்டுவிட்டேன்.
"அப்பா நீங்க யார  லவ் பண்ணிங்க" எந்த பதிலும் பேசாமல், புன்னகையோடு தன் வேளையில் முழ்கியிருந்தார், எங்கள் வீட்டுராஜா.
அம்மா என்னை செய்கையால் அழைத்து ,என் சிறுவயது பள்ளி ஆசிரியை பற்றின நினைவுகளை தூர்வாறினார். எதோ ஒருவகையில் அந்த ஆசிரியை எனக்கு சொந்தம் என தெரியும், அன்று தான் அப்பா வழி சொந்தம் என தெரிந்து கொண்டேன்.
அப்பாவை சீண்டியவளாக அவர்மீது  பெருமிதம் கொண்ட பார்வை பதித்தாள் அம்மா, அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்ல புன்னகைத்து கொண்டனர்.
தன் பெற்றோர்களுக்கிடையான காதலை காணும் மகனாக நான் பாக்கியசாலியே.
முதிர்ந்த காதல் ,முந்தய காதலை பற்றி எதையும் கண்டுகொள்வது இல்லை.
என்றைக்கும் நம்பிக்கை அற்று நிர்கதியாய் நிற்பதில்லை .
முதிர்ச்சி இல்லாத  நம் பலவீ னமே தன் காதல் ராஜ்யத்தை இழக்க காரணமாகிறது.

அப்பாவின் காலத்தில் இருந்தது போல் இல்லை, எங்களின் காலம் கொஞ்சம் முன்னேறியே இருந்தது , எங்களின் தரிசனத்துக்காக சில அம்மன் சிலைகள் தெருவில் இறங்கி நடப்பதுண்டு ,ஆனால் அவர்களே உண்மை சிலைகளை போலத்தான் ,வரம் கொடுக்கவோ பேச்சு கொடுக்கவோ துணிவதில்லை.
நட்பு பழகி பின்னர் அதையே காதலாக மாற்றும் திறனெல்லாம் இல்லை.
தவறி யாரவது ஒரு பெண் நட்புடன் பழகினால் அவளை சரியான கிராக்கி, என சொல்லித் திரியும் என் வட்டாரம்.

அப்படியாக பெயர் பெற்றிந்த ஒரு பெண்ணிடம், இனி நீ ஆண்களுடன் பேச வேண்டாம் என கூறினான் ஒரு நல்ல நண்பன்.
ஏன்? என அவள் கேட்ட பொழுது ,மென்மையாகவும், நன்மையாகவும், இயல்பினை எடுத்துரைத்தான்.
சில காலம் கழித்து அவர்களுக்குள்ளே, ஓர் நல்ல காதல் பூக்க தொடங்கியது,
அவர்கள் காதலை நான் அறிந்த உண்மை காதல் என்பேன்.
அதீத அன்போடு ,அக்கறையான ராஜாவும், அவனை அதிகம் கொஞ்சும் ராணியும் வேண்டும் ,காதல் ராஜ்யத்தில்.


ஏன்?!.... காதலை இவ்வளவு புனிதமாக கருதினோம் என தெரியவில்லை,
சுக,துக்கங்களுக்கும் முன்னால் காதலெனும் உணர்வு தொடங்கி விடுகிறதா!,
ஆம் அனால் அதற்கும் முன்னோடியாக மனிதர்களிடத்தில் வலுப்பெறும் ஓர் உணர்வு உண்டென சொல்கிறது என் மனம், அது காமம்.  வார்த்தைகளுக்குபொருளறியாத வயதிலே தொடங்கிடும் அவ்வுணர்வு, அதோடு பதின்பருவத்தில் தன் முழு ஆதிக்கம் செலுத்துகிறது.

நட்போடு பழக பெண்கள் பயப்படுவதே இதற்காகத்தான், எல்லா பெண்களும் பொதுவாக வன்புணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள் என கூறுகிறது ஓர் ஆய்வு,
இதனாலே யாருடனும் பேசாத, பயந்த வழுவிழந்த மனநிலையை அவர்களுக்கு தருகிறதோ என்னமோ,

இத்தனையும் மீறி சிலர் நட்போடு பேசிப்பழகினால், அவர்களையும் தங்களோடு இணைத்து தவறான வார்த்தைகளை பேசி, பெருமை கொள்கிறது ,
தன் வளைவுகளுக்கெல்லாம், வளைய மறுத்தால், தைரியமாக அரை லிட்டர் ஆசிட் அடிக்கிறது , இவ்வக்கிரம் மிக்க  ஆணாதிக்கம்.

இதனால் ஆணாதிக்கம் மட்டுமே, காதல் சாம்ராஜியத்தை சரிப்பதாக கருத வேண்டாம். சில பெண் தந்திரங்களும் இதனை நிகழ்த்துவதுண்டு.

அம்மா, அப்பா, தன் உறவுகள் அனைத்தையும் , தனக்கான துணை தேடித் தரும், தகுதி இல்லதவைகளாய் கருதி, மகா சிறப்பு மிக்க முகநூல் வலைத்தளத்தில் துணை தேடினார், ஒரு அண்ணா.
ஒரு பெண், தன் சொந்த மாநிலத்தவள், மாநிறம், அவர் தன் கல்யாணத்துக்கு பார்த்த பொருத்தங்கள் அவ்வளவே.

வலைத்தளத்திலிருந்து மீண்டு ஒருவருக்கொருவர் சந்தித்து கொண்டனர்,
அவர்களுக்குள் காதல் பூத்து, வெகு விரைவிலே, கனிக்கவும், இனிக்கவும்  தொடங்கி விட்டது.

அவர்கள் தனிமை வேண்டும் என கருதி, ஒரே திரைப்படத்தை இரண்டு காட்சிகள் முடித்துக்கொண்டு, மிக தாமதமாக எங்கள் அறைக்கு செல்வோம்.
அப்பொழுதும் கூட, கதவு தட்டி திறக்க, உடை மாற்றும் சலனத்துடன் நீண்ட இடைவெளி தேவைப்படும் நிலையில் இருப்பார்கள்.

அவர்கள் மாநிலத்திலும் நிறைய சாதி பிரிவுகள், இருக்கும் போல,
எப்படியும் வீட்டினில் சம்மதிக்க மாட்டார்கள் என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்.
அவர்கள் இருவரின் மனநிலையும், பெற்றோரின் சம்மதம் கேட்பதாக இல்லை.
கல்யாணம் செய்து கொண்டு, தனியே வீடெடுத்து, வாழ்வதென முடிவு செய்தார்கள்.
குறைந்தது பதிவு திருமணமாவது செய்திருக்கலாம், விசாரித்த போது தெரிந்து கொண்டோம், சினிமாவில் காட்டுவது போல் அது அவ்வளவு சுலபமான காரியமல்ல, எனவே தான் அதையும் தவிர்க்க வேண்டியதாயிற்று.

எதுவுமே முறைப்படி இல்லை, ஆனால் அவள் கழுத்தில் தொங்க போகும், தாலி மட்டும் முறைப்படியானதாக இருக்க வேண்டுமென கருதினார்.
தன் மொபைல், பைக் எல்லாம் விற்று ஒன்றரை லட்சம் மதிப்பில் தாழி செய்திருந்தார்,
நண்பர்கள் படை சூழ, கைத்தட்டல்களாக அர்ச்சதை துவப்பட்டது அவர்கள் கல்யாணத்தின் போது.

சில நாட்கள், மிக சந்தோசமாகத்தான் இருந்தார்கள், நண்பர்கள் யாரேனும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தால், கூடிய சிக்கிரமே கொஞ்சல் சத்தம் கேட்க தாங்காமல் வெளியேறி விடுவார்கள்.

ஒரு நாள் திடிரென, முழு பாட்டில் சிக்னேச்சருடன் எங்கள் அறையில் அமர்ந்திருந்தார், ஆரம்பத்தில் எதோ விசேசமாக இருக்கும் என கருதி, ஆளுக்கொரு குவளையுடன் அவர் அருகில் அமர்ந்தோம்.
யார் முகத்தையும் பார்க்க தயங்கியவாரக தலை குனிந்து அழுது கொண்டிருந்தார், ஒன்றன் பின் ஒன்றாக, அவர் சொல்ல சொல்ல, அதிருப்தி எங்கள் தலையையும் சுற்றத்தொடங்கியது.

அவள் தொலைபேசியில், இருந்த மொத்த தகவல்களும், பாலியல் சார்ந்தவைகளாக இருந்திருக்கின்றன, அவள் நிறைய பேருடன் ஒரே போல் கொஞ்சுபவள் என தெரியப்படுத்துகிறது, அவளின் கொஞ்சல்களுடனான குறுந்தகவல்கள், இவரை கட்டியனைத்த அதே நேரத்தில் அனுப்பப்பட்டிருந்ததை அழுத்தமாக நொந்து கொண்டார்.

வேறு யாராயினும், அவள் முகத்தில் ஆசிட் அடிக்கவே துணிந்திருப்பார்கள்.
ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவள் முகத்தையும் சேர்த்து மொத்தமும்  மறக்க வேண்டும் எனக் கூறினார்.
" எங்க போனாலும் அவ நெனப்பாவே இருக்கு டா  தம்பி " என சொல்லி யாரிடமும் சொல்லாமல் கண்காணாத தூரம் கடந்து போனார்.

அந்த பெண்ணை பார்க்க எங்களுக்கும் அருவெருப்பாக தோன்றியது.
தொலைபேசியில் அவளையும் தொலையசொல்லி, முடிந்தது அவளைப்  பற்றின நினைவுகள்.

வெகு நாட்கள் கழிந்து அந்த அண்ணனை மிண்டும் சந்தித்தேன்.
தன் மனைவி குழந்தையுடன், சந்தோசமாகத்தான் இருந்தார் 
அவர் மனைவியின் கழுத்தில் தொங்கும் தாலி, என்னுள் பல நினைவுகளை உசலாட்டின.
ஒரு விழ்த்தப்பட்ட காதல் சாம்ராஜ்யம, மீண்டும் புதுப்பொழிவு அடையும் காட்சியாக என் கண் முன்னே விரிந்தது.

ஆழ்ந்து சிந்தித்தால் காதல் வெறுமையானதாக, அர்த்தமற்றதாக தெரியும் என சொல்லுவார் தந்தை பெரியார் .
காதலில் மட்டுமாவது பெரியார் வழி பற்றுவோம், இனி தொடர்ந்து.

                                                                                                                            பேசுவோம் ...








Wednesday, February 13, 2013

வெட்டிப்பேச்சு ( தொடர் 1 )


22 வருடங்கள் கடந்து விட்ட என் வாழ்கையில்,பரிசு பொருள் என எதையும் பெற்றதில்லை, எதிலும் ஆர்வம் கிடையாது,வேகம் கிடையாது,நான் சரியான முட்டாள் என கருதியிருந்தேன்.
வாழ்கை யாரையும் வெறுங்கையோடு நிறுத்தி வைக்காது,என தெரிந்து கொண்டபொழுது , தேடத் தொடங்கி,நெடுநாட்கள் கடந்த பின்னர் கண்டுபிடித்த ஒன்று தான் என் பேச்சு.

 மா.......அம்மா........எனும்  மழலை வார்த்தைகள் முதல், இன்று வரை முடிவில்லாமல் தொடர்கிறது என் பேச்சு.
சில பிரிவுகளும்,இறுக்கமான மௌனங்களும் ஆங்காங்கே தடை செய்த பொழுதும், தன் தவறுகளை திருத்திக்கொண்டு,குழந்தை என பிறந்து,வெற்றிநடை பழகும்  என் பேச்சு.அகல கண்விரித்து, ஆச்சர்யங்களுடன்,நலம் விசாரிக்க  தொடங்கி,ஆங்காங்கே மரநிழல் தேடி,தண்ணீர் பருகி,பெருமூச்சுடன் நெடுதூர பயணமாக தன் உருவத்தை பதிவு செய்துள்ளன.

என் ஒவ்வொரு பேச்சின் முடிவிலும், தன் முதல் திரைப்படம் காணும் இயக்குனர்களை போல அதீத சந்தோசமும்,உற்சாகமும் அடைந்து விடுகிறேன்,இதனாலே  என் மகிழ்ச்சி கருதிய நண்பர்கள் ஒருபோது என்னை மௌனிக்க விடுவதில்லை.
நிண்ட நேரம் முகம் பார்த்து விட்டு மெல்லிய சிரிப்போடு,
"சொல்லு மச்சி ......" எனும் வார்த்தைகளால் தொடர்ந்து தூண்டிய படியே இருப்பார்கள்.
வெறும் வெட்டிபேச்சுக்களாக இருந்தவைகள்,இன்று வாதங்களாகவும், உரையாடல்களாகவும் முன்னேற்றம் அடைந்துள்ளன.
நிறைய பேச்சாளர்களை நண்பர்களாக பெற்றுள்ளேன்.அதனினும்

என் பேச்சுக்கு பிரியமான தோழி ஒருத்தி இருக்கிறாள்,அவள் என் அம்மா,என் பேச்சுக்களின் பள்ளிக்கூடம் அவள், அதிக வெகுளி,என் வாதங்களுக்கு எதிர்போ,விரோதமோ அளிக்கத் தெரியாதவள்,சொல்வதெல்லாம் சரி எனும் பொருட்டு தலையசைப்பால். திடிரென அவள் முகத்தில் சிரிப்போ,அழுகையோ,பயமோ,ஏக்கமோ தென்படுகிறதென்றால், வெற்றி, சிறப்பாக பேசியிருக்கிறேன் என்பது பொருள்.ஆனால் பரிசு எதுவும் வழங்கத்தெரியாது.

அப்பா,என் இனிய நண்பர்களுள் ஒருவர். அம்மா பள்ளிகூடமெனில்,
அப்பா பயிற்சிக்கூடம், போட்டிக்கு உகந்த பேச்சாளர்.
சொந்த தொழிலே கெளரவம்,அதுவே சுகம் என, சிறு வயதிலே வியாபாரம் தொடங்கிவிட்டார், அது நஷ்ட்டத்தில் போனதெல்லாம் வேறு கதை.
அப்பா அரசுஉழியர் ஆகவேண்டுமென ஆசை கொண்டிருந்தாள்  அம்மா, அது நிறைவேறாமல் போகவே, ஏக்கத்துடன் என்னை அரசுஉழியராக சொல்லி  அறிவுரித்துக்கொண்டிருந்தாள்.
நானோ,அரசுஊழியமென்பது இயலாதவர்களுக்கும்,அதிக தேவை உள்ளவர்களுக்கும், கிடைக்கட்டும். நான் நன்கு படித்து என் சொந்த முயற்சியிலே முன்னேறுவேன் என வாதம் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்பா இடைமறித்து "நி பெரிய முற்போக்கு சிந்தனையாளன வருவடா"
என்றார், அவருக்கு சாதகமாக பேசியதாலும் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

ஆனால் தன் மகனை டாக்டர்,கலெக்டர் என காணும் அப்பாக்களிடையே,
என்னை முற்போக்கு சிந்தனையாளனாக பாவித்த அப்பாவின் வார்த்தைகள் என் பேச்சுக்கான முதல் பரிசு.

இதேபோலத்தான்,என் கல்லூரி இரண்டாம் வருடத்திலும் நடந்தது.
முதல்வருட மாணவர்கள் உள்ளேறினர், அனைத்து விதமான ராக்கிங்களும்,
முடிவடைந்ததை தொடர்ந்து,புதுவிதமான கொடுமையாக இருக்கும் என, என்னை கதை பேச அழைத்து சென்றார்கள்,
நான் அசரவில்லையே, விஜய்,அஜித் ரசிகர்கள் என பகுதி வாரியாக பிரித்துக் கொண்டு, கதை பேசி கலக்கியன்.
உணவருந்துகையில் முத்த மாணவர் பகுதிக்குள், முதல்வருட மாணவர்கள் நுழைய கூடாது என்பது விடுதியின் எழுதப்படாத விதி.
ஆனால் என்னிடம் கதை கேட்கும் பொருட்டு, விதிகளை உடைத்து புரட்சி ஏற்ப்படுதியுள்ளேன். வெறித்தனமான விஜய் ரசிகன் ஒருவன் இருந்தான்,
எங்கே கதை பேசிக்கொண்டிருந்தாலும், சரியாக இடைவேளையில் புகுந்து,
"அண்னே விஜய் கதையா?" என ஆச்சர்யம் கலந்து கேட்பான். முடிந்தவரை சொல்லிக் கொண்டிருக்கும் கதையையே விஜய்க்கான கதையாக்குவதற்குள்,
மண்டை சூடாகி விடும்.
வழக்கமாக மாலை 8 மணியளவில் ராக்கிங் தொடங்கும், நானோ 5 மணிக்கெல்லாம் சென்று அடைக்கலம் அடைந்து விடுவேன்.
ராக்கிங் செய்யும் சகாக்கள் நான் இருக்கும் அறையை மட்டும் விட்டு விடுவார்கள், கதை கேட்கும் ரசிகர்களை நடுவில் வெளியிழுத்தால்,பின்னர் அவர்கள் சிக்க வேண்டியதிருக்குமோ எனும் பயம்.
மெல்ல மெல்ல இதை உணரத்தொடங்கிய முதல் வருட மாணவர்கள், உட்கார இடமின்றி ஒரே அறையில் குவிந்து கிடந்தார்கள்,திரையரங்கில் அமர்வது போல், என்னையே திரையாக பாவித்து கண்சிமிட்டாமல்,கதை கேட்க வைத்த அனுபவம் அலாதியானது.

ஒவ்வொரு அறையாக நோட்டமெடுத்து,ராக்கிங் செய்பவர்களை கணக்கெடுத்துக்கொண்டார் விடுதி காப்பாளர்,
மறுநாள் கல்லூரியின் அறிவிப்பு பலகை,கொத்தாக பிடிபட்டவர்களிடம் சொல்லியது 15 நாள் தண்டனை விடுப்பு என்று,
என் பெயர் மட்டும்  அதில் இடம்பெறவில்லை, நான் நல்ல
விதமாக,அன்பாக நடந்து கொள்கிறேன் என முதல் வருட மாணவர்கள் வாய்மொழிச் சான்றிதல் அளித்துள்ளார்கள்.
என் பேச்சுக்காக நான் பெற்ற பரிசுகளில்,பெரு மதிப்புடையதும்,மறக்க முடியாதது,என் 15 நாள் கல்லூரி நாட்கள்.

கடந்த சில நாட்கள் முன்பு, ஒரு மணி நேரம் மௌனவிரதம் இருக்க சொல்லி போட்டி வைத்தார்கள், என் நண்பர்கள்.
போட்டி நேரம் கடந்தும் என் மௌனம் நீடித்தமையால்,
" டேய் நீ இப்போ பேசப்போறிய இல்லையா?" என செல்லமாக கடிந்து கொண்டான் என் இனிய நண்பன்,
எப்போதும் எதிரணி என்றாலும்,அதிலே அன்பு வளர்க்கும்,
செப்பனிடவும்,செதுக்கிடவும் வைரமென பட்டைதீட்டிடவும்,என் வாதங்களை நுண்ணிப்பாக கவனிக்கும்.
என்னை குழந்தை என கொண்டு என் வார்த்தைகளை மழலையாக கருதி மௌனமாக புன்னகை செய்திடும் என் நண்பர்கள் வெறுமென பரிசு பொருட்கள் மட்டுமல்ல,பேச்செனும் ஆழ்கடல் முழ்கிக் கிடைத்த முத்துக்கள்.

வெறுமென பேசுகிறேன் அவ்வளவு தான்,என விட்டுப்போக தோன்றவில்லை.
சாலமன்பாப்பையா பேசினால் நிச்சயம் சிரிப்போடு தான் முடித்து வைப்பார், கோபிநாத் தன் வாதத்தலைப்பினை, விளக்காமல் விடுவதில்லை,
சிவகுமார் பேசினால் ஆன்மிகம், சுகிசிவம் பேசினால் சிந்தனை, ஒவ்வொரு பேச்சாளர்களிடமும் ஒரே விதமான தொனி தென்படுவதுண்டு.அதேபோல
என் பேச்சுக்கள் எதை பிரதிபலிக்கின்றன? எனும் கேள்வியை நண்பர்களிடம் கேட்ட போது, ஒருவரிடமும் பதில் இல்லை.என் கேள்வியை கொஞ்சம் விளக்கி கூறியபடி இருந்தேன். " ஏன்டா கமல் மாதிரி புரியாமலே பேசிக்கிட்டுருக்க" என சொல்லிய நண்பனுக்கு நன்றி. அவனை அறியாமலே,என் கேள்விக்கு பதில் அளித்தான் அல்லவா !

அய்யன் வள்ளுவன் சொல்லும் நாவடக்கத்தையும் மனதில் கொள்க,எனில் 
வெறுமே மகிழ்ச்சி மட்டுமல்லாது, நிறைய வருத்தங்களையும், அவமானங்களையும் அள்ளித்தந்துள்ளது என் பேச்சு.
கல்லூரி நாட்களில் பேசுகிறேன் என அதிகம் வெளி நடத்தப் பட்டிருக்கிறேன்.
"கொஞ்ச நேரமாவது பேசாம இறுக்கிய" என கடிந்து கொண்டவர்கள் ஏராளம்.
நான் அவன் தோழியுடன் அதிகம் பேசுகிறேன் என சொல்லி,கோபம் கொண்டு என்னுடன் தொடர்பில் இல்லாமலிருக்கிறான் ஒரு நண்பன்.
பேசிப் பேசி ஒருவரை ஒருவர் பிடித்து போனோம் பின்னர் ஒரு நாள்,
"ஒரு பிரச்னைனு வரும் போது உனக்கு சுத்தமா பேசவே தெரியல டா"
என பிரிந்தவள் இரண்டு வருடங்கள் கழிந்தும் இன்னும் பேசாமலே இருக்கிறாள், மனஇறுக்கத்துடன் பேசாத பொழுதுகள் நரக வேதனை,
என் பேச்சில் காட்டும் ஆர்வத்தை, என்னுடன் பேசாதவர்களிடம் காட்டுவதில்லையோ என தோன்றுகிறது. போனது போகட்டும்,
இனி யாரிடம் பேசாமல் இருக்கப்போவதில்லை,


இத்தனை சொல்லும் என் பேச்சினை  பற்றி, ஒரு கவிதை எழுதலாம் என தோன்றுகிறது,இதோ:

                                    மதம் இறைவனை பேசுகிறது,
                            இயற்கை இயல்பினை பேசுகிறது,
                                மௌனம் மனதினை பேசுகிறது.


இனி என் தொடர் வாயிலாக இறைவனையும்,இயல்பினையும்,மனதினையும்,

                                                                                                                                  பேசுவோம்.....